Wednesday 3 February 2016

11வது கரிசல் திரை விழா தொடக்கம் - பத்திரி்கைச் செய்தி

நெல்லை, பிப் 03: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 11வது கரிசல் திரை விழா புதன்கிழமை தொடங்கியது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொடர்பியல் துறையின் மனோ மீடியா கிளப் சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது கரிசல் திரை விழா. இந்த விழாவில் 300க்கும் மேற்பட்ட ஊடகத்துறை மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். மூன்று நாள் நிகழ்வுகளின் தொடக்க விழா புதன்கிழமை காலை பல்கலைக்கழக வ.உ.சி. அரங்கில் நடந்தது.

தொடக்க விழாவில், பல்கலைக்கழகக் கூட்டுக்குழு உறுப்பினரும் தொடர்பியல் துறை தலைவருமான முனைவர்.பெ.கோவிந்தராஜு வரவேற்புரையாற்றினார். பதிவாளர் முனைவர்.அ.ஜான் டி பிரிட்டோ விழாவைத் தொடங்கிவைத்துப் பேசினார். கூட்டுக்குழு உறுப்பினர் முனைவர் ராதாகிருஷ்ணன் நாயர் தலைமையுரை ஆற்றினார். மனோ மீடியா கிளப் தலைவர் ஹார்ட்லின் ஜெனித்த ரால்ஃப் மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்வுகளை அறிமுகம் செய்தார். திரைப்பட ஆய்வாளரும் நடிகருமான யூகி சேது மற்றும் ‘கோடை மழை’ படத்தின் இயக்குநர் கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய யூகி சேது, “மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சாதாரண மனிதனைப் போலவே தன் வாழ்வை அமைத்துக்கொண்டார். ஆனால், அவர் சாதாரணமானவர்களில் அசாதாரணமானவராக இருந்தார். அவர்தான், கனவுகளின் வழியே தங்கள் திறமையை அறிய இளைஞர்களை ஊக்குவித்தார். நம் முன்னோர்கள் உலகிற்கே முன்னோடிகளாகத் திகழ்பவர்கள். அவர்கள் அறிந்துசொன்னவற்றை மறந்துவிட்டது தான் நாம் செய்த தவறு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நமது முன்னோடிகளிடம் கடவுள் பற்றிய அக்கரை இல்லை. அதனால் தான் பல கடவுளர்களை நம் சமூகம் பெற்றது. அவர்களுடைய கற்பனை வளமும் அதற்குக் காரணமாக இருந்தது. தற்கால சினிமாவில் தடம்பதிக்க நினைப்பவர்களுக்கு வகுப்பறையைத் தாண்டிய கல்விதான் அவசியம். நியூட்டன் மரத்தடியில் ஈர்ப்புவிசையைக் கண்டுபிடித்தைப் போல புதிய சிந்தனைகள் அப்போது தான் உருவாகிறது. வாழ்வில் எந்த நிலையை எட்டுவதும் சாத்தியம். அதற்கு நம் திறமையை மட்டும் நம்பி அழைப்பதே அவசியம்” என்று கூறினார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

விழாவில் பேசிய இயக்குநர் கதிரவன், “திரைப்படங்கள் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும். இதுவரை ஓவியங்கள், கல்வெட்டுகள் மற்றும் சுவடிகள் மூலம் வரலாற்றை அறிந்திருக்கிறோம். எதிர்காலத்திற்கு இப்போதைய திரைப்படங்களும் வரலாற்று ஆவணம் தான்” என்று கூறினார்.

முன்னதாக, புகைப்படக் கலைஞர் ஹென்க் ஒச்சப்பன் மற்றும் யூகி சேது ஆகியோர் மாணவர்களின் புகைப்படக் கண்காட்சியை தொடங்கிவைத்து பார்வையிட்டனர்.

விழாவில் தேர்வாணையர் பிரபாகரன், தொலைநிலைக் கல்வி இயக்குநர் கண்ணன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக, மனோ மீடியா கிளப் துணைத்தலைவர் மாரீஸ்வரி நன்றி கூறினார்.

-Media Team, 11th Karisal Thirai Vizha 2016

No comments:

Post a Comment