Tuesday 2 February 2016

11வது கரிசல் திரை விழா 2016: சிறப்பு விருந்தினர் அறிமுகம் - ஹென்க் ஒச்சப்பன்

தனது புகைப்படங்களில் மதுரை மாநகரையே தூக்கிக்கொண்டு அலையும் ஹென்க் ஒச்சப்பனின் இயற்பெயர் ஹென்க் ஜேக்கப்ஸ். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், நமது மதுரைக்கு நிரந்தரமான விருந்தாளி. தனது ஆயிரக்கணக்கான புகைப்படங்களில் மதுரையின் முகங்களை உலகிற்கே காட்டிக்கொண்டிருக்கிறார் ஹென்க் ஒச்சப்பன்.

1987ஆம் ஆண்டு முதல் வருடம் தவறாமல் சுற்றுலாப் பயணியாக இந்தியாவுக்கு வரும் ஹென்க் ஒச்சப்பன், 1994ஆம் ஆண்டு தன் பயணத்தின் போது, ரிக்ஷாவண்டி ஓட்டிக்கொண்டிருந்த ‘ஒச்சப்பன்’ என்பவரைச் சந்தித்தார். ரிக்ஷாக்காரரான ஒச்சப்பனுடன் மதுரையின் மூலை முடுக்கெல்லாம் சுற்றிவந்ததார். அரைகுறை ஆங்கிலத்தில் மதுரையின் வண்ணங்களை அவருக்கு அறிமுகப்படுத்தினார் அந்த ஒச்சப்பன். ஒச்சப்பனின் நட்பிற்கு அடையாளமாக தன் பெயருடன் ஒச்சப்பன் என்பதையும் இணைத்துக்கொண்டார்.

அதற்குப் பிறகும் நீடித்த அவர்களது நட்பினால் ஹென்க் ஒச்சப்பன் ஆண்டுதோறும் தன் பயணித்தின் போது தனது நண்பரான ஒச்சப்பனின் வீட்டிற்குச் செல்வதை வழக்கமாக்கிக்கொண்டார். தற்போது மதுரையைத் தன் சொந்த ஊராகவே கொண்டாடிவருகிறார் ஹென்க்.

தன் தாய்நாடான பெல்ஜியத்தில் ஒன்பது மாதங்களும் மதுரையில் மூன்று மாதங்களுமாக ஒவ்வொரு ஆண்டையும் கழித்துவருகிறார் ஹென்க் ஒச்சப்பன். பெல்ஜியத்தில் இருக்கும் போதும், தன் புகைப்படங்களின் வழியே மதுரையின் எழிலைப் எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கிறார். பெல்ஜியத்தில் தனது இயந்திர வாழ்க்கைக்கு மதுரையில் கழிக்கும் மூன்று மாதங்கள் தான் விடுதலைக்காலமாகிறது என்றார் ஹென்க் ஒச்சப்பன்.

வருசநாடு, மேலக்கால், உசிலம்பட்டி போன்ற கிராமங்களில் அடிக்கடி சுற்றிவந்திருக்கும் ஹென்க் ஒச்சப்பனுக்கு மாங்குடி தான் மிகப்பிடித்த ஊரு. அந்த சின்ன கிராமத்தின் இயற்கை வனப்பினால் அவ்வூரை சொர்க்க பூமியாகவே போற்றுகிறார் ஹென்க் ஒச்சப்பன்.

மதுரைக்கு வந்தால் கேமிராவும் கையுமாக படம்பிடித்துக்கொண்டிருக்கும் ஹென்க் ஒச்சப்பன் பெல்ஜியத்தில் சிறை அதிகாரியாக பணியாற்றுகிறார். இருந்ததாலும் தன் தொழிலை வெளியிட்டுக்கொள்ளாமல் புகைப்படக்கலைஞராகவே தன்னை முன்னிருத்துகிறார் ஹென்க் ஒச்சப்பன். பத்து வயதில் பள்ளிக்கூடத்தில் நடந்த போட்டியொன்றில் ஒரு கேமராவைப் பரிசாகப் பெற்ற ஹென்க், அப்போதிலிருந்தே தன் தேடலுக்கான மூன்றாவது கண்ணாக கேமிராவை பாவித்துவருகிறார். இன்று வரை சுமார் 60,000 புகைப்படங்கள் கொண்ட பெரும் களஞ்சியத்தையே உருவாக்கியிருக்கிறார்.

பன்முகத்தன்மை கொண்ட நாடான இந்தியாவின் வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள், கோயில்கள், திருவிழாக்கள், பண்டிகைகள் என அனைத்தையும் தனது புகைப்படங்கங்களின் வாயிலாக ஆவணங்களாக்கிக்கொண்டிருக்கும் ஹென்க் ஒச்சப்பன் அவர்களின் வருகையால் பெருமிதம் அடைகிறது 11வது கரிசல் திரை விழா.

ஹென்க் ஒச்சப்பன் பற்றி மேலும் அறிய,

No comments:

Post a Comment