Thursday 4 February 2016

இந்தியாவின் வண்ணங்கள் எண்ணற்றவை: ஹென்க் ஒச்சப்பன் - பத்திரகைச் செய்தி

நெல்லை, பிப் 4: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கரிசல் திரை விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்.
வ.உ.சி கலையரங்கில் நடந்த புகைப்படப் போட்டியில் பெல்ஜியத்திலிருந்து வந்திருந்த புகைப்படக் கலைஞர் ஹென்க் ஒச்சப்பன் மாணவர்களின் புகைப்படங்களை முன்வைத்துப் பேசினார். தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
அப்போது பேசிய ஹென்க் ஒச்சப்பன், ‘மதுரையில் ஜல்லிக்கட்டைப் புகைப்படம் எடுத்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம். இதுவரை எனது புகைப்படங்களில் சிறந்த படம் என்று அதைத்தான் சொல்வேன். ஏனென்றால், ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு. அதனைத் தடைசெய்தது கவலைக்குரியது. என் புகைப்படங்களில் அடர்த்தியான வண்ணங்களையே பயன்படுத்துகிறேன். வண்ணங்கள் காலம் கடந்தும் அந்த தருணத்தை உயிர்போடு மீட்டுத்தரும். உற்சாகமூட்டும். அதற்காகே நான் வண்ணங்களை மிகவும் நேசிக்கிறேன். முதலில் அரவிந்தர் பற்றி அறிவதற்காகத்தான் இந்தியா வந்தேன். ஆனால், இந்த நாட்டின் எண்ணற்ற வண்ணங்கள் எனக்கு வியப்பை ஏற்படுத்தின. இங்கே நான் கண்டவற்றை சரியாகப் பகிர்ந்துகொள்ள என்னிடம் வார்த்தைகள் இல்லை. அதனால், புகைப்படங்களில் அவற்றைச் சொல்கிறேன்’ என்று கூறினார்.
இந்த நிகழ்வில், துறைத்தலைவர் பெ.கோவிந்தராஜு மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, சிரிய நாட்டு இயக்குநர் ரூபன் லகட்டொல்லாவின் ஆவணப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடந்தது.

-Media Team, 11th Karisal Thirai Vizha 2016

No comments:

Post a Comment