Sunday 31 January 2016

11வது கரிசல் திரை விழா 2016: சிறப்பு விருந்தினர் அறிமுகம் - சமஸ்

அன்றாடம் நிகழும் சமூக அவலங்களின் பின்னால் ஏற்படுகிற தனிமனித அவஸ்தைகளை அழுத்தந்திருத்தமாக தன் எழுத்தில் வடித்து வருபவர் சமஸ். இதழியல் மாணவர்களுக்கு ஆதர்சமாகவும் முன்னோடியாகவும் உருவாகியிருப்பவர். எளிய நடையில் எழுத்து, சமகால பிரச்சனைகளை அதன் பின்புலத்துடன் தொலைநோக்குப் பார்வையில் அணுகுவது, எழுத்துக்கு முக்கிய மூலங்களைக் களப்பணியின் வாயிலாக திரட்டுவது ஆகியவை சமஸின் தனித்துவமான அடையாளங்கள். இதழியல் துறையில் சமஸின் பயணம் மிகவும் நெடியது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1979ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி பிறந்தார் சமஸ். பள்ளிப்படிப்பையும் பட்டப்படிப்பையும் உள்ளூரிலேயே முடித்தார். ஆங்கிய இலக்கியம் படித்த சமஸ் பள்ளிப்பருவத்திலேயே பத்திரிகைகளுக்கு எழுத பேனா பிடித்துவிட்டார். இந்தியன், இந்தியன் இனி ஆகிய இதழ்களில் எழுதியது சமஸின் இதழியல் ஆர்வத்திற்கு ஊக்கமூட்டியது. தொடர்ந்து தினமலர், தினமணி ஆகிய நாளிதழ்களிலும் ஆனந்த விகடன் மற்றும் புதிய தலைமுறை ஆகிய வார இதழ்களிலும் பணியாற்றியபோது தன் எழுத்துகளின் வாயிலாக வாசகர்களின் கவனத்திற்கு வந்த சமஸ், தி இந்து தமிழ் நாளிதழில் இணைந்ததும் தமிழகமெங்கும் கவனம்குவிக்கிற ஆளுமையாக வளர்ச்சி அடைந்தார்.

2009ஆம் ஆண்டு தினமணியில் சமஸ் எழுதிய தமிழக உணவுகள் பற்றிய சாப்பாட்டுப் புராணம் என்ற தொடர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் புழங்கும் உணவு முறைகளையும் உணவுப் பதார்த்தங்களையும் பற்றிய அறியப்படாத பதிவுகளை உள்ளடக்கிய ஆவணமாக அமைந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் தி இந்து தமிழ் நாளிதழில் எழுதிய இந்தியாவின் வண்ணங்கள் தொடரில் பலதரப்பு மக்களின் தேர்தல் குறித்த மதிப்பீடுகளையும் எதிர்பார்ப்பையும் பதிவுசெய்தார். 'நீர் நிலம் வானம்' என்ற தொடருக்காக பல ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு கடலோடிகள், விவசாயிகள் மற்றும் வனவாழ் மக்களை நேரில் சந்தித்து அவர்களுடனேயே தங்கி அவர்களுடைய அன்றாட வாழ்வையும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் விரிவாக எடுத்துரைத்தார் சமஸ். நீர் நிலம் வானம் தொடர் பின்னர் புத்தகமாக வெளியான சமயத்திலும் வாசகர்களிடேயே பெரும் வரவேற்பைப் பெற்றது. அண்மையில் சென்னையை பெரு வெள்ளம் தாக்கிய நாட்களில் சமஸ் தி இந்து தமிழ் நாளிதழில் எழுதிய கட்டுரைகள் உலகெங்கும் உள்ள வாசகர்களால் மிக அதிகமாக வாசிக்கப்பட்டுள்ளன. சமஸ் கட்டுரைகளின் தேர்ந்தெடுத்த தொகுப்பு 'யாருடைய எலிகள் நாம்?' என்ற நூலாக கடந்த ஆண்டு வெளியானது. சில நாட்களுக்கு முன், அந்த நூல் சிறந்த கட்டுரை நூலுக்கான சுஜாதா விருதையும் பெற்றுள்ளது.

சமஸின் எழுத்து சாமானியர்களிடையே சமூக சிக்கல்களை ஆராயும் நோக்கையும் பொதுப்வெளியில் கவனம்செலுத்தும் ஈடுபாட்டையும் அதிகப்படுத்தியுள்ளது. அதன் விளைவாக தி இந்து தமிழ் நாளிதழில் சமஸின் எழுத்தைத் தொடரும் வாசகர் வட்டம் ஒன்றும் உருவாகியுள்ளது. சமூக மேம்பாட்டுக்கான இதழியலை தன் இயக்க சக்தியாக கொண்ட தமிழ் ஊடகவியலாளர்களில் முன்னணி வகிக்கும் சமஸ் அவர்களின் வருகையால் கரிசல் திரை விழா பெருமிதம் அடைகிறது.

சமஸ் பற்றி மேலும் அறிய,

-          Media Team, 11th Karisal Thirai Vizha 2016

11வது கரிசல் திரை விழா 2016: சிறப்பு விருந்தினர் அறிமுகம் - ரூபன் லகட்டொல்லா

ரூபன் லகட்டொல்லா ஆவணப்பட இயக்குநர், புகைப்படக்கலைஞர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பாளர் என பல அடையாளங்கள் உடையவர். குறிப்பாக, மனித இனவரைவியல், மொழியியல் மற்றும் புவிசார் ஆவணப்படங்களை எடுப்பதில் நாட்டமுடையவர்.

2007ஆம் ஆண்டு ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சில் பட்டம் பெற்ற ரூபன் ரோமிலுள்ள ஊடக நிறுவனங்களில் பணிபுரியத் தொடங்கினார். 2011 முதல் தனக்கு மிகுந்த ஈடுபாடுடைய ஆவணப்படமெடுக்கும் முயற்சியில் தொடர்ந்து இயங்கி வருகிறார். பெரும்பாலும் கள ஆய்வின் அடிப்படையில் அமைகிற ரூபன் லகட்டொல்லாவின் படங்களில் வடக்கத்தி நாடுகளுக்கும் கிழக்கத்தி நாடுகளுக்கும் இடையேயான ஒப்பீடு முதன்மையான அங்கமாகும். ரூபன் லகட்டொல்லாவின் இலக்கியம் மற்றும் மொழியியல் பயிற்சியின் பயனாக தனது களப்பணிகளில் கிரகித்த அனைத்தையும் உகந்த முறையில் புரிந்துகொள்ளவும் அவற்றை எளிமையான கதையைப்போலப் படமாக்கவும் முடிகிறது.

ஐரோப்பா, பல்கன்ஸ். இஸ்ரேல், பாலஸ்தீனம், சிரியா, ஈராக் உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு படமெடுத்துவருகிறார் ரூபன்.

'நான் யார் என்பதை முடிவுசெய்ய எனக்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது. புகைப்படம், சினிமா, எழுத்து எனத் தேடிய பிறகு.... நான் ஒரு கதைசொல்லி என்பதை அறிந்துகொண்டேன். புகைப்படங்களின் வழியாகவும் திரைப்படங்களின் வழியாகவும் கதைசொல்லும் கதைசொல்லி நான்' என்று கூறியுள்ளார் ரூபன் லகட்டொல்லா.


இந்த இனிய தருணத்தில் ரூபன் லகட்டொல்லா அவர்களின் வருகைக்காக பெருமிதம் அடைகிறது 11வது கரிசல் திரை விழா.
-

Ruben Lagattolla is a Documentary Film Maker cum Photographer, Producer, Cameraman and Editor. He produce documentaries particularly about geopolitics, anthropology and linguistics.

In 2007 Ruben finished his Bachelor degree in English and French National and Post-Colonial Literatures and Languages. Then, he started working in 2007 in the news environment among national broadcasters such as SKY and RAI in Rome. Then with the experience, he moved to documentary films production, which have always been his passion. Many of his approaches are of personal research. His focus on human condition is usually on comparison between western and eastern lifestyles. His formation in literature and linguistics strongly characterized his explorations empowering his storytelling as well as his understanding of inner and outer human condition.

He makes more journey around the world to produce films. Europe, Balkans, Israel, Palestine, Syria, Iraq, Lebanon, Jordan. USA, Canada, Bahamas and Togo are the few among them. He declares himself as a story teller. I his own words, 'It took a while to understand what I do…photography, filming, writing. But what I conclude at the end of my day is that I tell stories. The stories of the people. Stories through photographs and films.

In this wonderful occasion, 11th Karisal Thirai Vizha takes immense pleasure to have your valuable presents here.

ரூபன் லகட்டொல்லா பற்றி மேலும் அறிய,



-          Media Team, 11th Karisal Thirai Vizha 2016

11வது கரிசல் திரை விழா 2016: சிறப்பு விருந்தினர் அறிமுகம் - யூகி சேது

யூகி சேது
(Yugi Sethu)
ஒரே சமயத்தில் வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் முத்திரையைப் பதித்தவர். நடிப்பது மட்டுமின்றி கதை, வசனம் எழுதுவதிலும் வல்லவர். இயக்குனர், திரைப்பட ஆய்வாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று பல முகங்கள் உடையவர் யூகி சேது.

சென்னையில் பிறந்த இவரது இயற்பெயர் சேதுராமன். தொனாலி ராமன் அவையில் இருந்த 'மதியூகி' என்ற அமைச்சரின் பெயரை தன் பெயருடன் இணைத்து சேதுராமன் யூகி சேது ஆனார். வணிகவியலிலும் அரசியலிலும் பட்டம் பெற்ற யூகி சேது இள வயதில் மிருதங்கம் வாசிப்பதிலும் பயிற்சி பெற்றார். ஆனால், யாருக்கும் பக்க வாத்தியமாக இருப்பதை விரும்பாத அவர் மிருதங்கப் பயிற்சியைக் கைவிட்டார். திரைப்பட இயக்கத்திற்கான பட்டயப்படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றுள்ள யூகி சேது, தனது மாணவப் பருவத்தில் 'The Rhetoric of the Continuity' என்ற எட்டு நிமிடக் குறும்படத்தை எடுத்தார். சத்யஜித்ரே பின்னணி இசை அமைத்து, ராஜிவ் மேனன் ஒளிப்பதிவு செய்த அந்தப் படம் 1984ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெற்ற ஒரே இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது.

யூகி சேது எழுதி, இயக்கிய முதல் படமான 'கவிதை பாட நேரமில்லை' 1987ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் வரும் 'காதல் என்ன காதல்' என்ற பாடல் உதடுகள் ஒட்டாமலே பாடுவதாக எழுதப்பட்டது. பிறகு, 1991ஆம் ஆண்டு வெளியான 'மாதங்கள் ஏழு' என்ற படத்தில் தான் யூகி சேது முதல் முதலில் நடிகராக அறிமுகமானார்.

யூகி சேது நடித்து வெளியான பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், அன்பே சிவம் மற்றும் ரமணா போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை பதிவுசெய்தன. ஆனால், அவற்றை மட்டுமே அளவுகோலாக்கி யூகி சேதுவின் ஆளுமையை அறிந்துவிட முடியாது.

அஜித்குமார் நடித்து அமோக வெற்றி கண்ட ஆசை திரைப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியவர் யூகி சேது. அஜித் குமாரின் மற்றொரு வெற்றிப் படமான 'வில்லன்' திரைப்படத்தின் கதையை எழுதியவர் யூகி சேது. அந்தப் படத்திற்கு 'சிறந்த கதைக்கான' விருதும் வென்றுள்ளார் யூகி சேது. அத்துடன் அஜித்தின் 'அசல்' படத்திற்கும் திரைக்கதை அமைத்துள்ளார். இயக்குநர் பாலாவுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த 'நான் கடவுள்' திரைப்படத்தின் கதை விவாதத்தில் முக்கிய அங்கம் வகித்தவர் யூகி சேது. தமிழ் மட்டுமின்றி, 'Pidgin' என்ற இத்தாலியத் திரைப்படத்திலும் 'Scream of the Ants' என்ற பெர்ஷியத் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் யூகி சேது.

'நையாண்டி தர்பார்', ‘யூகியுடன் யூகியுங்கள்’ போன்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார் யூகி சேது. அத்துடன், மேலும் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக இருந்திருக்கிறார்.

'திரைப்படத்தில் அழகியல்' என்கிற கருப்பொருளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர் யூகி சேது. அத்துடன் தற்போது அரிய பழங்கால திரைப்படங்களைச் சேகரித்து, அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.

திரைப்பட விமர்சகராகவும் விளங்கும் யூகி சேது திரைத்துறையின் பல்வேறு தளங்களில் தன் அடையாளங்களை பதிவுசெய்திருக்கும் வித்தகர். திரை கடலில் கப்பல் செலுத்த விரும்பும் இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழும் யூகி சேது அவர்களின் வருகையால் 11வது கரிசல் திரை விழா பெருமிதம் அடைகிறது.

யூகி சேது பற்றி மேலும் அறிய,

 -          Media Team, 11th Karisal Thirai Vizha 2016

Friday 22 January 2016

இணையத்தில் பதிவுசெய்ய (Register Online)

கரிசல் திரை விழாவின் பங்கேற்பாளர்கள் இணையத்தில் பெயர் மற்றும் விவரங்களை http://goo.gl/forms/FHl4lsqbxf எனும் முகவரியில் பதிவுசெய்யலாம்.

Participants Submit Application Online: http://goo.gl/forms/FHl4lsqbxf