Sunday 31 January 2016

11வது கரிசல் திரை விழா 2016: சிறப்பு விருந்தினர் அறிமுகம் - சமஸ்

அன்றாடம் நிகழும் சமூக அவலங்களின் பின்னால் ஏற்படுகிற தனிமனித அவஸ்தைகளை அழுத்தந்திருத்தமாக தன் எழுத்தில் வடித்து வருபவர் சமஸ். இதழியல் மாணவர்களுக்கு ஆதர்சமாகவும் முன்னோடியாகவும் உருவாகியிருப்பவர். எளிய நடையில் எழுத்து, சமகால பிரச்சனைகளை அதன் பின்புலத்துடன் தொலைநோக்குப் பார்வையில் அணுகுவது, எழுத்துக்கு முக்கிய மூலங்களைக் களப்பணியின் வாயிலாக திரட்டுவது ஆகியவை சமஸின் தனித்துவமான அடையாளங்கள். இதழியல் துறையில் சமஸின் பயணம் மிகவும் நெடியது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1979ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி பிறந்தார் சமஸ். பள்ளிப்படிப்பையும் பட்டப்படிப்பையும் உள்ளூரிலேயே முடித்தார். ஆங்கிய இலக்கியம் படித்த சமஸ் பள்ளிப்பருவத்திலேயே பத்திரிகைகளுக்கு எழுத பேனா பிடித்துவிட்டார். இந்தியன், இந்தியன் இனி ஆகிய இதழ்களில் எழுதியது சமஸின் இதழியல் ஆர்வத்திற்கு ஊக்கமூட்டியது. தொடர்ந்து தினமலர், தினமணி ஆகிய நாளிதழ்களிலும் ஆனந்த விகடன் மற்றும் புதிய தலைமுறை ஆகிய வார இதழ்களிலும் பணியாற்றியபோது தன் எழுத்துகளின் வாயிலாக வாசகர்களின் கவனத்திற்கு வந்த சமஸ், தி இந்து தமிழ் நாளிதழில் இணைந்ததும் தமிழகமெங்கும் கவனம்குவிக்கிற ஆளுமையாக வளர்ச்சி அடைந்தார்.

2009ஆம் ஆண்டு தினமணியில் சமஸ் எழுதிய தமிழக உணவுகள் பற்றிய சாப்பாட்டுப் புராணம் என்ற தொடர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் புழங்கும் உணவு முறைகளையும் உணவுப் பதார்த்தங்களையும் பற்றிய அறியப்படாத பதிவுகளை உள்ளடக்கிய ஆவணமாக அமைந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் தி இந்து தமிழ் நாளிதழில் எழுதிய இந்தியாவின் வண்ணங்கள் தொடரில் பலதரப்பு மக்களின் தேர்தல் குறித்த மதிப்பீடுகளையும் எதிர்பார்ப்பையும் பதிவுசெய்தார். 'நீர் நிலம் வானம்' என்ற தொடருக்காக பல ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு கடலோடிகள், விவசாயிகள் மற்றும் வனவாழ் மக்களை நேரில் சந்தித்து அவர்களுடனேயே தங்கி அவர்களுடைய அன்றாட வாழ்வையும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் விரிவாக எடுத்துரைத்தார் சமஸ். நீர் நிலம் வானம் தொடர் பின்னர் புத்தகமாக வெளியான சமயத்திலும் வாசகர்களிடேயே பெரும் வரவேற்பைப் பெற்றது. அண்மையில் சென்னையை பெரு வெள்ளம் தாக்கிய நாட்களில் சமஸ் தி இந்து தமிழ் நாளிதழில் எழுதிய கட்டுரைகள் உலகெங்கும் உள்ள வாசகர்களால் மிக அதிகமாக வாசிக்கப்பட்டுள்ளன. சமஸ் கட்டுரைகளின் தேர்ந்தெடுத்த தொகுப்பு 'யாருடைய எலிகள் நாம்?' என்ற நூலாக கடந்த ஆண்டு வெளியானது. சில நாட்களுக்கு முன், அந்த நூல் சிறந்த கட்டுரை நூலுக்கான சுஜாதா விருதையும் பெற்றுள்ளது.

சமஸின் எழுத்து சாமானியர்களிடையே சமூக சிக்கல்களை ஆராயும் நோக்கையும் பொதுப்வெளியில் கவனம்செலுத்தும் ஈடுபாட்டையும் அதிகப்படுத்தியுள்ளது. அதன் விளைவாக தி இந்து தமிழ் நாளிதழில் சமஸின் எழுத்தைத் தொடரும் வாசகர் வட்டம் ஒன்றும் உருவாகியுள்ளது. சமூக மேம்பாட்டுக்கான இதழியலை தன் இயக்க சக்தியாக கொண்ட தமிழ் ஊடகவியலாளர்களில் முன்னணி வகிக்கும் சமஸ் அவர்களின் வருகையால் கரிசல் திரை விழா பெருமிதம் அடைகிறது.

சமஸ் பற்றி மேலும் அறிய,

-          Media Team, 11th Karisal Thirai Vizha 2016

No comments:

Post a Comment