Sunday 31 January 2016

11வது கரிசல் திரை விழா 2016: சிறப்பு விருந்தினர் அறிமுகம் - யூகி சேது

யூகி சேது
(Yugi Sethu)
ஒரே சமயத்தில் வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் முத்திரையைப் பதித்தவர். நடிப்பது மட்டுமின்றி கதை, வசனம் எழுதுவதிலும் வல்லவர். இயக்குனர், திரைப்பட ஆய்வாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று பல முகங்கள் உடையவர் யூகி சேது.

சென்னையில் பிறந்த இவரது இயற்பெயர் சேதுராமன். தொனாலி ராமன் அவையில் இருந்த 'மதியூகி' என்ற அமைச்சரின் பெயரை தன் பெயருடன் இணைத்து சேதுராமன் யூகி சேது ஆனார். வணிகவியலிலும் அரசியலிலும் பட்டம் பெற்ற யூகி சேது இள வயதில் மிருதங்கம் வாசிப்பதிலும் பயிற்சி பெற்றார். ஆனால், யாருக்கும் பக்க வாத்தியமாக இருப்பதை விரும்பாத அவர் மிருதங்கப் பயிற்சியைக் கைவிட்டார். திரைப்பட இயக்கத்திற்கான பட்டயப்படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றுள்ள யூகி சேது, தனது மாணவப் பருவத்தில் 'The Rhetoric of the Continuity' என்ற எட்டு நிமிடக் குறும்படத்தை எடுத்தார். சத்யஜித்ரே பின்னணி இசை அமைத்து, ராஜிவ் மேனன் ஒளிப்பதிவு செய்த அந்தப் படம் 1984ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெற்ற ஒரே இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது.

யூகி சேது எழுதி, இயக்கிய முதல் படமான 'கவிதை பாட நேரமில்லை' 1987ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் வரும் 'காதல் என்ன காதல்' என்ற பாடல் உதடுகள் ஒட்டாமலே பாடுவதாக எழுதப்பட்டது. பிறகு, 1991ஆம் ஆண்டு வெளியான 'மாதங்கள் ஏழு' என்ற படத்தில் தான் யூகி சேது முதல் முதலில் நடிகராக அறிமுகமானார்.

யூகி சேது நடித்து வெளியான பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், அன்பே சிவம் மற்றும் ரமணா போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை பதிவுசெய்தன. ஆனால், அவற்றை மட்டுமே அளவுகோலாக்கி யூகி சேதுவின் ஆளுமையை அறிந்துவிட முடியாது.

அஜித்குமார் நடித்து அமோக வெற்றி கண்ட ஆசை திரைப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியவர் யூகி சேது. அஜித் குமாரின் மற்றொரு வெற்றிப் படமான 'வில்லன்' திரைப்படத்தின் கதையை எழுதியவர் யூகி சேது. அந்தப் படத்திற்கு 'சிறந்த கதைக்கான' விருதும் வென்றுள்ளார் யூகி சேது. அத்துடன் அஜித்தின் 'அசல்' படத்திற்கும் திரைக்கதை அமைத்துள்ளார். இயக்குநர் பாலாவுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த 'நான் கடவுள்' திரைப்படத்தின் கதை விவாதத்தில் முக்கிய அங்கம் வகித்தவர் யூகி சேது. தமிழ் மட்டுமின்றி, 'Pidgin' என்ற இத்தாலியத் திரைப்படத்திலும் 'Scream of the Ants' என்ற பெர்ஷியத் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் யூகி சேது.

'நையாண்டி தர்பார்', ‘யூகியுடன் யூகியுங்கள்’ போன்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார் யூகி சேது. அத்துடன், மேலும் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக இருந்திருக்கிறார்.

'திரைப்படத்தில் அழகியல்' என்கிற கருப்பொருளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர் யூகி சேது. அத்துடன் தற்போது அரிய பழங்கால திரைப்படங்களைச் சேகரித்து, அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.

திரைப்பட விமர்சகராகவும் விளங்கும் யூகி சேது திரைத்துறையின் பல்வேறு தளங்களில் தன் அடையாளங்களை பதிவுசெய்திருக்கும் வித்தகர். திரை கடலில் கப்பல் செலுத்த விரும்பும் இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழும் யூகி சேது அவர்களின் வருகையால் 11வது கரிசல் திரை விழா பெருமிதம் அடைகிறது.

யூகி சேது பற்றி மேலும் அறிய,

 -          Media Team, 11th Karisal Thirai Vizha 2016

No comments:

Post a Comment